×

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம்: வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடும், மரங்கள் அழிக்கப்பட்டதுமே காரணிகளாக அமைந்துள்ளதாக வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கத்திரி வெயில் இன்று தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே தகிக்கும் வெயிலை பார்த்து மக்கள் கதிகலங்கி நிற்கின்றனர். மேலும் வெயிலால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதனால்தான் வானிலை மையமும், தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும் தினமும் வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணம் குறித்தும், அதில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் கூறியதாவது:

தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதல் வெப்பம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர், ஆனால், கடந்த ஆண்டில் பதிவான வெப்ப அளவுகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் 2-3 டிகிரி மட்டுமே வெப்பம் அதிகரித்து இருக்கிறது. பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களில் வெப்பம் 6 டிகிரி வரை கூடுதலாக பதிவாகிறது. 12 மணிக்கு உச்சி வெயில் என்று சொல்வார்கள். ஆனால், அதிகபட்சமாக வெயில் பதிவாவது 2.45 மணிக்குதான்.

காரணம், 12 மணி வெயில் இருந்தாலும், பூமியை கிரகித்துக்கொண்டு வெளியே வெப்பம் விடும் நேரம் 2.45 மணி தான். எனவே, வெயில் தற்போது அதிகரித்துள்ளதால், வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெயிலில் போகக்கூடாது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வெயில் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். அதற்கு காரணம், மரங்கள் வெட்டப்பட்டு பெரிய கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்பட்டது தான், மரங்கள் அதிகமாக அழிந்து, கட்டிடங்களின் பரப்பு அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

எனவே, மக்களும் அரசாங்கமும் இணைந்து இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு காரில் 4 பேர் செல்வதற்கு பதிலாக 4 பேர் 4 கார்களை தனித்தனியாக பயன்படுத்துகின்றனர். ஒரே காரை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் வாகன நெரிசலும் குறையும், வெப்பமும் குறைய வாய்ப்புள்ளது. பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தினாலும் வாகன நெரிசல் குறையும்.

வீடுகளில், மாடியில் வெள்ளை கலர் பெயின்ட் அடித்தால், வீட்டின் உள்ளே உஷ்ணம் இறங்காது. தரைகளில் பூந்தொட்டிகள் வைக்க வேண்டும். நிறையச் செடிகளை மாடிகளிலும் வைத்து வளர்த்தால் எல்லாருக்குமே நல்லது. அதேபோல, சென்னையில் இந்த முறை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு குறைவு. ஏரிகளில் தண்ணீர் இருக்கவே செய்கிறது. தென் மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது.

The post தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்க அதிகப்படியான வாகன பயன்பாடு மரங்கள் அழிக்கப்பட்டதே காரணம்: வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Ramanan ,Chennai ,Kathri ,Former Director ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...